e-NIC திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் முயற்சி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து – விமல் குற்றச்சாட்டு

0
204
Article Top Ad

இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை (e-NIC) திட்டத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தனிநபர் தரவுத் தனியுரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச கடுமையாக எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், கைரேகை, விழித்திரை ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளை இந்திய இலாப நோக்கற்ற நிறுவனமான National Institute for Smart Government (NISG)இற்கு அணுக அனுமதி வழங்கப்படுவது “தேசிய நலனுக்கு எதிரானது” எனக் கூறினார்.

இலங்கை அரசு ஏற்கனவே இந்த e-NIC திட்டத்தின் 99% தொழில்நுட்ப வேலைகளை நாட்டுக்குள்ளே முடித்துவிட்டது. அதேசமயம், இதற்கான உபகரணங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றுக்காக 5 பில்லியன் ரூபாய் முதலீடும் செய்துள்ளது. ஆனால் இப்போது அந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக இந்திய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் (டெண்டர்) கொடுக்கப்படுவதை அவர் கடுமையாக விமர்சித்தார்

இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படும் தரவுகளில், மக்கள் நடமாட்டம், தங்குமிடம், மருத்துவத் தேவைகள் என முக்கியமான தனிப்பட்ட தகவல்களும் அடங்கும் என அவர் எச்சரித்தார். மேலும், தரவு மீறல் ஏற்பட்டால் இந்திய நிறுவனம் சாதாரணமான 10% பொறுப்பேற்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கவலைக்கிடமானது என கூறினார்.

இந்த முயற்சி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடர்புடையதாகவும், இது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலும் இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசின் Mazagon Dock Shipbuilders Ltd நிறுவனம், கொழும்பு டொக் யார்ட்டின் பெரும்பங்குகளை (51%) பெற்றுள்ளது. இது எதிர்காலத்தில் சர்வதேச இராணுவ தலையீடுகளுக்கான ஆபத்துகளை இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரிக்கிறார்.