பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது எழுந்திருந்த பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என விசாரணைக் குழு கண்டறிந்துள்ளதாகவும், அவரை பதவியிலிருந்து நீக்குமாறு பரிந்துரை செய்துள்ளது என்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) பாராளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அதன் அடிப்படையிலான பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன நியமிக்கப்பட்டாரை். நீதிபதி நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக செயற்பட்டனர்.
விசாரணை குழு 10 முறைக்கும் மேல் கூடி சாட்சியங்களை சேகரித்து, 2025 ஜூலை 16 முதல் தினசரி விசாரணைகளை நடத்தியது. இந்த விசாரணைகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளன. இதனடிப்படையில், தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை அச்சிடப்பட்டு, பாராளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

