தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: இராஜதந்திர நடவடிக்கையை கோருகின்றது இலங்கை

0
198
Article Top Ad

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை அரசு இரு நாடுகளும் உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு அமைதியான தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழப்புகள், பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான சேதம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்கள் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளன. டிரோன்கள், பீரங்கிகள் மற்றும் F-16 போர் விமானங்கள் என பலவிதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து தங்களது வரலாற்று சிறப்புமிக்க பிரேயா விஹார் கோயிலின் அருகே ஷெல் தாக்குதல் நடத்தியதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது.

1962 ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தால் கம்போடியாவுக்கு வழங்கப்பட்ட இந்த கோவில் பகுதி இன்னும் சர்ச்சைக்குரியதுதான். சமீபத்தில், இந்த பகுதியில் ஒரு தாய் வீரர் கண்ணிவெடியில் காயமடைந்த சம்பவம், நிலவரத்தை மேலும் பதற்றமாக்கியுள்ளது.

தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் நாகரிகம், இலங்கையுடனும் நெருங்கிய தொடர்புடையது. இவ்வாறான வரலாற்று பின்னணியுடன், அமைதி, இரக்கம் மற்றும் வன்முறையற்ற விடயங்களை ஆதரிக்கும் நாடுகளாக, இருதரப்பும் உரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது முன்வைத்த நடுநிலைக் கருத்துக்கள் இரு நாடுகளாலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தரப்பு தலையீடுகள் தேவையில்லை எனவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

தற்போது, இந்த மோதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.