Article Top Ad
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழியினை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்று (04) பார்வையிட்டனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசிரியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோருடன் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் உள்ளிட்ட குழுவினரே நேரில் பார்வையிட்டனர்.
அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

ஸ்கேன் பரிசோதனை ஆரம்பம்
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தரைகீழ் ஊடுருவும் ஸ்கேனிங் (GPR) பரிசோதனைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த பரிசோதனை ஆரம்பமாகியுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் நேற்று மேலும் நான்கு மனித எலும்புக்கூட்டுகள் கண்டறியப்பட்டன. இதனுடன் மொத்தமாக 130 எலும்புக்கூட்டுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதில் 120 எலும்புக்கூட்டுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

