வடக்கின் கல்வி பின்னடைவுக்கு நிர்வாக சீர்கேடே காரணம் – பிரதமர்

0
201
Article Top Ad

வடக்கு மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சினையே காரணம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காணவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் பிரதமரிடம் கருத்துத் தெரிவித்தனர்.

இவற்றை செவிமடுத்த பிரதமர், ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அந்த வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம் என சுட்டிக்காட்டினார். விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும், அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் – “கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருக்கின்றேன்” எனக் குறிப்பிட்டார்.