செம்மணி என்பது சாதாரண புதைகுழிகள் இல்லை, அங்கு பெருந்தொகையான மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். தங்களை சட்டத்திற்கு மேலாக கருதியவர்களும் சட்டத்தைப் பற்றி கவலைப்படாதவர்களுமே இதனைச் செய்துள்ளனர் என சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற, “வன்மம் – கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு“ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
1995ஆம் ஆண்டில் பின்னர் யாழ். குடாநாட்டில் விடுதலைப் புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்ட பின்னரே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதென அவர் கூறியுள்ளார். 1995-2009 காலப்பகுதியில் இராணுவத்தினர் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றது என குறிப்பிட்ட அவர், நிதி அனுமதியை பெறுவது மிகவும் கடினமான விடயமாக உள்ளதென சுட்டிக்காட்டினர்.
இவை முறையாக புதைக்கப்பட்ட புதைகுழி இல்லை. ஆடைகள் இன்றி, குறைந்தளவு ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இவை குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவை என்றும், இதற்கு சர்வதேச விசாரணை அவசியம் என்றும் சட்டத்தரணி இரத்தினவேல் மேலும் தெரிவித்தார்.

