முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

0
161
Article Top Ad

இலங்கைக்கான மலேசிய, அவுஸ்திரேலிய, கனேடிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் வியட்நாமின் ROX குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஆகியோரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதம் (Badli Hisham bin Adam) உடனான பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. சுற்றுலா, வர்த்தகம், கல்வி உள்ளிட்ட துறைகளில் மலேசியாவின் சமீபத்திய முன்னேற்ற அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக இதன்போது மலேசிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) அவர்களை ஜனாதிபதி சந்தித்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடியின் போதும் அதன் பின்னரும் வழங்கிய உதவிக்கு ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்தார். சுற்றுலா, கல்வி மற்றும் தொழிற்கல்வி துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குவதாக போல் ஸ்டீபன்ஸ் உறுதியளித்தார்.

இதேவேளை, தனது பதவிக்கால முடிவை முன்னிட்டு வெளியேறும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ்-ஐயும் (Eric Walsh) ஜனாதிபதி சந்தித்தார். கனடாவில் வசிக்கும் இலங்கை மக்களின் பங்களிப்பையும், நாட்டின் பொருளாதார முன்னேற்றம், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க செயல்முறைகளுக்கான கனடாவின் ஆதரவையும் ஜனாதிபதி பாராட்டினார். எதிர்காலத்திலும் இத்தகைய ஒத்துழைப்பு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, வியட்நாமின் ROX குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவரும் கடல்சார் வணிக கூட்டு பங்கு வங்கியின் (MSB) தலைவருமான டிரன் அன் துவன் (Tran Anh Tuan) உள்ளிட்ட பிரதிநிதிகளையும் ஜனாதிபதி  சந்தித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழலைக் கருத்திற்கொண்டு, இந்நாட்டில் முன்னெடுக்கக் கூடிய புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தொழில்துறை வலயமொன்றை நிறுவுவது தொடர்பான வசதிகள் குறித்தும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் ஆதன விற்பனைத் துறைகளில் முதலீடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. புதிய முதலீடுகளுக்கு நிறுவன மட்டத்தில் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

இந்த சந்திப்புகளில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் பங்கேற்றனர்.