திருவிழா நாளில் ஹர்த்தால் அறிவிக்கப்பட்டமைக்கு கண்டனம் – திகதியில் மாற்றம்

0
161
Article Top Ad

ஆவணி மாதம் 15ஆம் திகதி மடுத்திருத்தலத்தின் பிரதான திருவிழா அன்று வடக்கு கிழக்கில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய ரீதியில் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் வருகைதரும் திருவிழா நாளில் இந்தக் ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது என மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் தெரிவித்தார்.

முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமைக்கு இராணுவமே காரணம் என்று குறிப்பிட்டு, வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், திருவிழா நாளில் இவ்வாறு ஹர்தாலுக்கு அழைப்பு விடுப்பது கண்டனத்திற்கு உரியது என மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “ஹர்த்தாலுக்கான காரணங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு நாம் ஆதரவாக இருக்கின்றோம். இன்று மட்டுமல்ல மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் காலத்திலும் மன்னார் மறைமாவட்டத் திருச்சபை, குறிப்பாக மன்னார் குருக்கள் ஆயரோடு இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துள்ளனர். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து வகையான அநீதிகளுக்கு எதிராகவும் போராடியுள்ளனர். இதை முழு உலகமும் அறியும்.

இந்த நிலையில் மடுத்திருப்பதியின் ஆவணித்திருவிழாவை கவனத்தில் கொள்ளாமல், இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட இத்தீர்மானம் எமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது.

இவ்வேளையில் வரலாற்று ரீதியான சில விடயங்களையும் சுட்டிக்காட்ட விழைகின்றோம். யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில்கூட மடுத்திருப்பதியின் திருவிழாக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அன்றைய அரசாங்கங்களும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகளும் சரி இத்திருவிழாக்களை எந்த இடையூறும் இல்லாமல் நடத்துவதற்கு தமது பூரண ஆதரவை, ஒத்துழைப்பை வழங்கிவந்தனர் என்பதை இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஹர்த்தாலை திருவிழாவுக்குப் பின்னர் வேறொரு நாளுக்கு பின்போடுமாறு வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

புதிய திகதிக்கு இந்தக் ஹர்த்தால் மாற்றப்படும்போது வழக்கம்போல மன்னார் மறைமாவட்டடத் திருச்சபை இதற்கான பூரண ஆதரரவை வழங்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். எமது இந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய திகதியை அறிவிக்குமாறு திரு. சுமந்திரன் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு ஹர்த்தால் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எனினும், அன்றை நாளில் நல்லூர் திருவிழா நடைபெறும் நிலையில், அதுவும் உசிதமான திகதியாக அமையாது என்றும், இரு குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவத்தை இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாற்றும் அரசியல் இதில் உள்ளது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.