யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இன்று (18) ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்து அறிவித்தனர்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் காணப்படும் இராணுவ காவலரணுக்கு அருகில் இளைஞன் ஒருவர் மரணித்தமைக்கு இராணுவமே பொறுப்பு என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், அதற்கு நீதி கோரியும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரியும் இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்லையில், யாழ்ப்பாண நகரப் பகுதியில் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்ததாகவும் ஏனைய பகுதிகளில் ஆதரவு கிடைத்தன என்றும் தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஹர்த்தால் அறிவிப்பு வெளியான உடனே, ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தமிழரசு கட்சியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

