செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவியுடன் உருவாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி ரஷ்யாவில் மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக ரஷ்ய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் செப்டம்பர் முதல் ஒக்டோபர் மாதம் வரை மனிதர்களுக்கு முதலாவது தடவையாக செலுத்தப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 80 சதவீதம் வரை கட்டி வளர்ச்சியை குறைத்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களுக்கு இது பயனுள்ளதாக இருக்குமென விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோவில் உள்ள முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சி மையம், இந்த தடுப்பூசி நேரடியாக புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இது வெற்றியடைந்தால், உலக சுகாதார துறையில் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் தற்போது சுமார் 40 இலட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மட்டும் 6 லட்சத்து 25 ஆயிரம் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், வெற்றிகரமாக உருவாக்கப்பட்டால், இந்த தடுப்பூசி ரஷ்ய பிரஜைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இது சர்வதேச அளவில் பகிரப்பட வாய்ப்பில்லை எனவும், பகிரப்பட்டாலும் உயர் விலை கொடுத்து மட்டுமே நாடுகள் பெற முடியும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை தரக்கூடும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

