ட்ரம்ப்–ஜெலென்ஸ்கி சந்திப்பு: போர் குறித்த வேறுபாடுகள் நீடிக்கின்றன

0
166
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையிலான சந்திப்பு, முந்தையதைவிட அமைதியான முறையில் நடந்தது. இருப்பினும், உக்ரைன் போர் குறித்த அடுத்த கட்ட தீர்வுகள் குறித்து இரு தரப்பினருக்கும் வேறுபாடுகள் தொடர்ந்தன.

ஒவல் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கடந்த பெப்ரவரியில் நடந்த அதிர்ச்சியூட்டும் வகையில் கோபமடைந்த முந்தைய சந்திப்பைப் போலல்லாமல் இந்த சந்திப்பு சுமூகமாக இடம்பெற்றுள்ளது. எனினும், நிலைமை மோசமாகும் என நினைத்து ஜெலென்ஸ்கி குறைவாக பேசியிருக்கலாம் என்றும் சில கருத்துக்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறெனினும், இந்த பேச்சுவார்த்தை அமைதியாக இடம்பெற்றுள்ளது.

ஆனால், அமெரிக்கா–உக்ரைன் தலைவர்கள் ஐரோப்பிய தலைவர்களுடன் பத்திரிகையாளர்களுக்கு முன்னர் தோன்றியபோது, கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன. ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர், உக்ரைனில் உடனடி போர்நிறுத்தமே அடுத்த படியாக இருக்க வேண்டும் என்றனர். ஆனால் ட்ரம்ப் அதனை ஏற்காமல், நிரந்தர தீர்வுக்கு முன்னதாக போர் நிறுத்தம் அவசியமில்லை என்று வாதிட்டார்.

ஜெலென்ஸ்கி இவ்விஷயத்தில் அதிகமாக பேசவில்லை. ஆனால் மூடப்பட்ட அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தைகள் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் புடினை அவர் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மையமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வெளிவந்துள்ள தகவலின்படி, 90 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் குறித்து இரு தரப்பும் பேசியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இதில் விமான எதிர்ப்பு அமைப்புகள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ஏனைய ஆயுதங்கள் என்பன அடங்கும். அதோடு, உக்ரைனிய ட்ரோன்களை அமெரிக்கா வாங்கி, அவற்றின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டமும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால், புட்டின் இதுவரை நேரடி சந்திப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.