இலங்கையின் அரசியல் நிலைமை கவலையளிக்கின்றது – மைத்திரி

0
111
Article Top Ad

இலங்கையின் அரசியல் நிலை குறித்து தான் கவலையடைவதாகவும் மக்கள் மகிழ்ச்சியில் இல்லையென்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சாதாரணமாக வீதியில் செல்பவர்கள் மற்றும் பேருந்து தரிப்பிடத்தில் நிற்பவர்களிடம் இதுபற்றி கேட்டால் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றின் பின்னர் நேற்று (20) ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தான் எப்போதும் உண்மையை கதைப்பதாகவும், நாட்டு நிலைமை பற்றிய உண்மை தெரிந்தும் தெரியாததைப் போல சிலர் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக அண்மையில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இதுகுறித்து மைத்திரியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மைத்திரி, “எதிர்க்கட்சிகளே நம்பிக்கையில்லா பிரேரரணைகளை கொண்டுவருகின்றன. எதிர்த்தரப்பினரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அவை தோல்வியடைகின்றன. ஜனநாயக நாடு ஒன்றில், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவருவதானது, அதுபற்றி பாராளுமன்றில் விவாதித்து அதற்கான காரணம் அல்லது விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்துவதே அதன் நோக்கமாகும்” என்றார்.