இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பது, நாட்டின் அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இந்தச் சம்பவத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள, நாற்பதாண்டுகளாக இலங்கை அரசியலில் மையப்புள்ளியாக இருந்த அவரது நீண்ட பயணத்தையும், அவர் ஜனாதிபதியாக இருந்த இக்கட்டான காலத்தையும் பார்க்கவேண்டியுள்ளது. காரணம், அதுவே இப்போது பேசுபொருளாக அமைந்துள்ளது.
ரணிலும் இலங்கை அரசியலும்
அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் 1949ஆம் ஆண்டு பிறந்த ரணில், 1993இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக பிரதமராக பதவியேற்றார். அடுத்த முப்பது ஆண்டுகளில், அவர் ஆறு முறை பிரதமராக பணியாற்றினார் மற்றும் நாட்டின் பழமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக உருவெடுத்தார். அவரது பல பிரதமர் பதவிக் காலங்கள் அரசியல் குழப்பங்களால் நிறைந்திருந்தன. 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட குறுகிய தோல்வி, மேலும் 2018ஆம் ஆண்டின் அரசியல் நெருக்கடி என்பன குறிப்பிடத்தக்கவை.
2022ஆம் ஆண்டில் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இதுவரை காணாத இக்கட்டான நிலைக்குச் சென்றது. பொருளாதார நெருக்டி மற்றும் ஊழலை எதிர்த்து மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்த, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடுமையாக சரிவடைந்த பொருளாதாரம், அதியுச்ச பணவீக்கம், உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியங்களின் பற்றாக்குறை நீடித்த சூழலில், ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டை நிலைநிறுத்தும் கடினப் பொறுப்பு அவர்மீது விழுந்தது. இலங்கையை மீட்க முடியாத நிலையில் இருந்து காப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பொருளாதார மீட்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, சர்வதேச நிதி உதவியையும் பெற்றுக்கொள்வது என்ற மிகக் கடினமான பணி அவருக்கு ஏற்பட்டது.
அரச நிதி துஷ்பிரயோகமும் பின்னணியும்
இந்தப் பின்னணியில், அவரை கைது செய்ய வழிவகுத்த குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக பல்வேறு அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது, சொந்த விடயத்திற்காக அரச நிதியை செலவுசெய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பணம், குறிப்பாக அவரது பாதுகாப்பு செலவுகளுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகளைச் சுட்டிக்காட்டினாலும், கைது நடைபெற்ற காலமும் அதன் விதமும் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். நீதியை நிலைநாட்டும் ஒரு நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை பலர் கருதுகின்றனர் என்றபோதும், எதிர்வரும் ஜெனீவா அமர்வு மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் என்பவற்றை கருத்திற்கொண்டு அரசாங்கம் இதனை திட்டமிட்டு நடத்தியுள்ளது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகளும் விமர்சகர்களும், இது ஆபத்தான முன்னுதாரணமாகி, ஜனநாயக மரபுகளையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதிக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் பிளவுகளை அதிகரித்து, ஆட்சி அமைப்புகளின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் குறைக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
எதிர்வினைகள்
விசாரணையும் அதைத் தொடர்ந்த கைதும் ஒரு பாரபட்சமற்ற ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை என்று அரசாங்கம் கூறுகிறது, எந்த அரசியல் சார்பும் இதில் இல்லை என்று வலியுறுத்துகிறது. குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுத் துறை போன்ற சுயாதீன அமைப்புகளின் பணியை அவை வலியுறுத்துகின்றன என்றும், அவை உயர் அதிகாரிகளைக் கூட பொறுப்புக்கூற வைக்கின்றன என்றும் அரச தரப்பு கூறுகின்றது.
எதிர்க்கட்சியினரோ, இந்தக் கைது சட்டத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை புறக்கணித்து அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான முயற்சி என்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்ளிட்டவர்கள், ஜனநாயக மதிப்புகளுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கவலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கைது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டுசேர வழிவகுத்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. இன்று காலை எதிரணியினர் கூட்டாக இணைந்து ஒருமித்து குரல்கொடுத்து ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த கைது சம்பவம் இலங்கையின் நெருக்கமான அரசியல் சூழலை ஒரேயடியாக ஆட்டம்காண வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட தாக்கங்கள், சமூக குழப்பங்கள் மற்றும் ஆட்சித்துறை நம்பிக்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்ந்தும் நீடித்துவரும் சூழலில், இலங்கையின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்பு பாதையில் இது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதே இப்போது எம்முன் உள்ள கேள்வியாகும்.
ரணில் விக்ரமசிங்கவின் கைதினை வெறும் சட்ட விவகாரமாக பார்க்க முடியாது. இது இலங்கையின் கடந்த அரசியல் பாரம்பரியங்களுக்கும் எதிர்கால அரசியல் நிலைமைகளுக்கும் இடையிலான முக்கிய தருணமாக உள்ளது.
குற்றத்தில் சிறிய குற்றம் பெரிய குற்றம் என்று பார்க்க முடியாது என்றாலும்கூட, மிகப்பெரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, குறிப்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே மத்திய வங்கியின் மோசடி குறித்த கோப்புகள் தம்மிடம் உள்ளதாக தற்போதைய ஜனாதிபதி வெளிப்படையாகவே கூறிவந்தார். அவற்றிற்கு என்ன நடந்தது? ஏனைய நிதியியல் உள்ளிட்ட பலத்த மோசடிகளில் பேசுபொருளாக உள்ள பலர் பற்றி அவர்கள் கதைத்த விடயங்கள் என்னவாகின? அவற்றை மௌனிக்க செய்த ஆயுதமா இந்த கைது நடவடிக்கை என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது.
மறுபுறம் செப்டெம்பர் மாத ஐ.நா. அமர்வில் இலங்கை என்ன பதிலளிக்கப்போகின்றது, பொறுப்புக்கூறல் தொடர்பில் என்ன செய்ய போகின்றனர் என்றெல்லாம் கேள்வி எழுகையில், இந்த அவசர கைது பற்றிய சந்தேகங்கள் எழுவது நியாயமானதே.
செய்தியாக்கம் – கே.கே.

