ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது – எரிக் சொல்ஹெய்ம்

0
94
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், அவரை விடுவிப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணிலின் உடல்நிலை குறித்தும் கவலை வெளியிட்டுள்ள எரிக், 2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் அடைந்த போது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவை வழங்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ள எரிக், எனினும், உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் கைது தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் அவருக்கு சார்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.