முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று (26) நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகம் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரச நிதியை தனியார் பயணத்திற்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, கடந்த 22ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ரணில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இன்று வழக்கு மீள விசாரணைக்கு வரவுள்ளதோடு, அவரது உடல்நிலையை கருத்திற்கொண்டு நீதிமன்றில் ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். ஸூம் தொழில்நுட்பம் மூலம் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டால், அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் இன்று கொழும்பில் கூட வேண்டும் என, நேற்று இடம்பெற்ற எதிரணியினரின் சந்திப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் நிகழலாம் என கருதி, கலகத்தடுப்பு பொலிஸார் உள்ளடங்கலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதும் அங்கு பெருமளவில் ஆதரவாளர்க் கூடியுள்ளனர். ஏதேனும் சட்டத்திற்கு முரணான விடயங்கள் இடம்பெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

