காலி முகத்திடலில் கடந்த 2022 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட “கோட்டா கோ கம” போராட்ட தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகளின் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பிறகு, நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை வழங்கினார்.
இதன்படி, சந்தேகநபர் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல வேண்டும் என்றும், வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளதோடு, CID மற்றும் நீதிமன்றம் அழைக்கும் போது அவ்வப்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய அழைப்புகளை தவிர்க்கும் சூழலில் பிணை இரத்து செய்யப்படுவதோடு, சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று நீதவான் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு செப்டம்பர் 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

