ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு தகவல்களின் படி, இதுவரை 622 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பல கட்டிடங்களை தரைமட்டமாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குணார் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகங்கர் மாகாணத்தின் ஜலாலாபாத் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், பல இடங்களில் வீதிகள் இடிபாடுகளால் மறைக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளன.
நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். வீதி வழியே கொண்டு செல்ல இயலாதவர்களை விமானம் வழியாக மருத்துவமனைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பார்களோ என்ற அச்சம் நிலவுகிறது.

