ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1411ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று (02) அங்கு மீண்டும் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், நேற்றைய நிலநடுக்கத்தில் தரைமட்டமாகியுள்ளன.
மலைகளில் பாறைகள் சரிந்து, வீதிகள் மேலும் சேதமடைந்து, இடிபாடுகளை தோண்டுவது ஆபத்தானதாக மாறியதால் மீட்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 3124 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுவதாக தலிபான் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார். 5400இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சேவ் தி சில்ட்ரன் என்ற உதவி குழு, சர்வதேச சமூகம் அவசர நிதியை அவசரமாக விடுவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, சுத்தமான நீர் ஆதாரங்களை சீர்குலைத்து, நோய் குறித்த அச்சத்தை அதிகரித்து, உணவுக்கான அணுகலைத் தடைசெய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும்,சுகாதார அமைப்பு மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதையும், சேவைகளை வழங்குவதில் உள்ள சவால்களையும் உலக சுகாதார நிறுவனம் (WHO) வலியுறுத்தியுள்ளது.

