குருக்கள்மடம் புதைகுழி விடயத்திற்கு விரைவில் நடவடிக்கை – நீதியமைச்சர்

0
73
Article Top Ad

குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான முறைப்பாடுகளை நீதியமைச்சு ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி வளாகத்திற்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க நியாயமான, பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை செயன்முறைக்கு அரசாங்கம் அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கும் என்றும், கண்ணியமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்போது அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர்,  காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் தலையீட்டின் கீழ், செம்மணி மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி, சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைய, வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அதன் பிரகாரம், கடந்த கால கசப்பான சம்பவங்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட்டு, சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அரசாங்கம் நிலைநாட்டும் என்று நீதியமைச்சர் இதன்போது கூறினார்.