தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

0
83
Article Top Ad

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் மற்றும் அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரான தக்சின் ஷினவத்ராவுக்கு உயர் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்த தக்சின், 2007 ஆம் ஆண்டு பியூ தாய் கட்சியைத் தொடங்கினார். அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட்டதாக அவர்மீது வழக்குகள் தொடரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு மொண்டெனேகுரோவுக்கு தப்பிச் சென்றார். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டு அவர் தாய்லாந்துக்கு திரும்பிய நிலையில், அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், தண்டனைக் காலம் மன்னரால் ஓராண்டாகக் குறைக்கப்பட்டது.

கோடீஸ்வரரான தக்சின் சில மணி நேரங்கள் மட்டுமே சிறையில் இருந்த நிலையில், வைத்திய சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்தபடியே தண்டனையை அனுபவித்தார். ஆறு மாதங்களில் பிணையில் விடுதலையாகி, மீண்டும் அரசியலில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற வாக்கெடுப்பில் அவரது கட்சி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, தண்டனைக்காலத்தை முறையாக அனுபவிக்கவில்லை எனக் கருதி, அவர் மீது ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என தாய்லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.