முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்திற்கு வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் எடுத்த தீர்மானம் தவறானது என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இத்தகைய முக்கியமான முடிவுகள் கட்சி மட்டத்தில் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலம் மக்களின் நலனுக்கானதாகவே என்று கருதப்பட வேண்டும் என்றும், அதற்கு ஆதரவு வழங்காதது தவறான முடிவாகும் என்றும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்ட சாணக்கியன், எதிர்காலத்தில் மக்கள் நலன் சார்ந்த சட்டமூலங்களுக்கு கட்சி முழுமையாக ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
அத்துடன், ஊழல் ஒழிப்பு மற்றும் மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் சாணக்கியன் உறுதியளித்தார்.

