அஞ்சலிக்கு தடையாகும் போலி அரசியல்

0
295
Article Top Ad

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரின் முன்னிலைக் குரலாக செயற்பட்ட தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை, ஒரு மனித உரிமை மட்டுமல்ல, சமூக ஒற்றுமையின் அடையாளமாகும். ஒரு ஜனநாயக நாட்டில், யார் அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற வரையறை இருக்க முடியுமா? திலீபனின் தியாகம் ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலைக்கானதே அன்றி, தனிமனிதன் உரிமை கொண்டாடுவதற்கல்ல என்பதை தமிழ் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

நேற்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த விடாமல் தடுத்தது, வெறுமனே அரசியல், கட்சி என்பதையும் தாண்டி, இது பிரதேசவாத நோக்கா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஜனநாயகம் என்றால் என்ன?

ஜனநாயகம் என்பது பொதுமக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படும், அரசியல் நடவடிக்கைகளில் சம வாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கட்டமைப்பு. அஞ்சலி செலுத்துதல் என்பது அடிப்படை ஆன்மீக மற்றும் சமூக மரியாதைச் செயல். இது மனித நேயத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும் ஒரு பாகமாகும். சம உரிமைக்காக போராடும் நாங்கள், எமது சமூகத்திலுள்ளவருக்கே தடை விதிப்பதை எவ்வாறு பார்க்கலாம்?

பிரதேசவாதமா?

சந்திரசேகரன் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிரதேச அரசியல் மற்றும் பிரதேசவாத சிக்கல்கள் இதில் பங்காற்றியிருக்கலாம். அவர் செம்மணியை பார்வையிடச் சென்றபோதும் இதே எதிர்ப்பு எழுந்தது. கட்சி அரசியல்தான் காரணம் என்றால், அதனை ஜனாதிபதி பார்வையிடுவதற்கு தடையில்லை என்பதை எங்ஙனம் ஏற்பது? காரணம், இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அதுமட்டுமல்ல, ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான அவர், இந்த நாட்டின் எந்தவொரு இடத்திற்கும் செல்வதற்கான சகல சட்டரீதியான உரிமைகளும் உள்ளன. அவரை தடுப்பது, நாளை அந்த சமூகத்திற்கே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்களை, அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களே பதிவுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அவர் பயன்படுத்தும் மொழியை எள்ளி நகையாடும் தமிழர்கள், அவருக்கு “பெருந்தோட்ட அமைச்சுதான் சரி” என்ற வித்தியாசமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சம உரிமை வழங்கப்பட வேண்டும் என கூக்குரலிடும் தமிழ் சமூகம், அதே சமூகத்தைச் சேர்ந்த ஆனால் வேறு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அந்த உரிமையை வழங்கத் தயாரா என்ற சுயபரிசோதனையைச் செய்ய வேண்டியுள்ளது.

மனித உரிமைகள், சம உரிமை மற்றும் சமூக ஒற்றுமை

ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அஞ்சலியின் உரிமை சமூக மரியாதையின் அடிப்படை உரிமை ஆகும். இதை தனிப்பட்ட அரசியல் விருப்பங்கள் அல்லது பிரதேசவாத காரணங்களால் கட்டுப்படுத்த முடியாது. இது, மனித உரிமைகளின் அடிப்படை கொள்கையை பாதுகாக்கும், சமூக ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்தும், அரசியல் சிந்தனை மற்றும் சமூக இணைப்பை மேம்படுத்தும் வழியாகும்.

தியாக தீபம் திலீபனின் நினைவு, தனி ஒருவருக்கோ அல்லது ஒரு பிரதேசத்துக்கோ சொந்தமானதல்ல; அது ஒட்டுமொத்த தமிழர் சமூகத்தின் தியாகத்தையும் விடுதலைக் கனவையும் பிரதிபலிக்கிறது. எனவே, அந்த நினைவிடம் அனைவருக்கும் திறந்த இடமாக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் அஞ்சலி செலுத்தும் உரிமையை மறுப்பது, அரசியல் பிரதேசவாதத்தின் குறுகிய நோக்கை மட்டுமே பிரதிபலிக்கிறது. உண்மையான ஜனநாயகம் என்பது சம உரிமையும் சமூக ஒற்றுமையும் காக்கப்படும் நிலை. ஆகவே, தமிழ் சமூகம் தன் உள்பிரிவினைகளை தாண்டி, ஒற்றுமை, மனித நேயம் மற்றும் சம உரிமைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, திலீபன் போன்ற தியாகிகளின் நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்.

செய்தியாக்கம் – கே.கே.