
வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை அரசியல் இலாபத்திற்காக விடுவிக்க முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று (18) நடைபெற்றது.
இதன்போது வடக்கில் அரச தரப்பினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் குறிப்பிட்டார். இதுகுறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க முடியாது என பிமல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் – “37 வருடங்களாக மூடப்பட்டிருந்த வசாவிளான் வீதியை நாங்கள் திறந்துள்ளோம். அதற்கு நாங்கள் விழா எடுத்தோமா? அரசியல்வாதிகள் சென்றனரா? அண்மையில் கொமாண்டோ தர அதிகாரிகள் வந்து, அரசாங்க அதிபரிடம் நான்கு உறுதிப்பத்திரங்களை கையளித்தனர். அமைச்சர்கள் வந்து கொடுக்கவில்லை. ஆகவே இதன் அரசியல் பக்கம் எமக்கு நன்கு தெரியும்.
அந்த நேரத்தில் மக்களின் காணி பாதுகாப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்டது. பாதுகாப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்ட காணிகள், பாதுகாப்பு தேவை முடிந்துவிட்டால் கொடுத்துவிடுங்கள் என்றுதான் ஜனாதிபதி கூறியுள்ளார். அவற்றிற்கு விழா தேவையில்லை. நாங்கள் இவற்றை கூறிக்கொள்ளாவிட்டாலும், சிலர் தங்களால்தான் காணிகள் விடுவிக்கப்பட்டதென கூறிக்கொள்கின்றனர். வடக்கு மாகாண மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவில் வாக்களித்துள்ளனர். ஆகவே உங்களை விட எமக்கு அதிக பொறுப்புள்ளது. அதற்காக எமது அதிகாரிகள் செயற்படுகின்றனர்.
வேறு பிரதேசங்களிலும் அபிவிருத்தி பணிகளுக்காக காணிகள் கையகப்படுத்தப்பட்டன. அந்த காணிகளில் ஒரு தேங்காய் மரத்தையேனும் நட முடியாமல் சுமார் 40 வருடங்களாக மக்கள் காத்திருக்கின்றனர். வடக்கில் 25 வருடங்களாக செய்யாத அபிவிருத்திகளை நாம் செய்கின்றோம். இடங்களை மாத்திரம் வைத்துக்கொள்ளப் போகின்றோமா? ஆகவே, அவற்றை செய்வதற்கான முறைகள் உண்டு. அதனூடாக நாம் செயற்படுவோம்” என்றார்.
இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

