போதைப்பழக்கத்தின் விளைவு – இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தொழிலாளர்கள்

0
68
Article Top Ad

போதைப்பழக்கத்தால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட இரண்டு இலங்கை தொழிலாளர்களை இன்று (27) நாட்டிற்கு திருப்பி அனுப்ப இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் ஒருவர், 2024 செப்டம்பரில் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியகத்தில் பதிவு செய்து இஸ்ரேலுக்குச் சென்றவர். கடந்த இரண்டு மாதங்களாக அவர் தனது பணியிடத்துக்குச் செல்லாமல் இருந்த நிலையில், ஜெருசலமில் உள்ள இலங்கையர்கள் குழுவால் டெல் அவிவிற்கு அழைத்து வரப்பட்டதாக பணியகம் கூறியுள்ளது. பின்னர், தூதரக தலையீட்டின் மூலம் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

மற்றொருவர், ஏழு ஆண்டுகளாக இஸ்ரேலில் பணியாற்றி வந்தவர். அவர் நீண்டகாலமாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி பணியிடத்திற்கு செல்லாமல் இருப்பதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

போதைப்பழக்கத்தால் வெளிநாட்டில் வேலை செய்வது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம் என்றும், அங்கு குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டங்களின்படி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் பணியகம் எச்சரித்துள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும், போலி சான்றிதழ்களை வழங்கி இதுபோன்ற நபர்களை அனுப்பும் நிறுவனங்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.