மாகாண சபை தேர்தல் – அநுர அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

0
121
Article Top Ad

இலங்கையில் 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மாகாண சபை முறை அறிமுகமானது. முன்னாள்  ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட இந்து – லங்கா ஒப்பந்தத்தின் பிரகாரம் மாகாண சபை முறை உருவாக்கப்பட்டதுடன்,  1988 பெப்ரவரி 3ஆம் திகதி மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

மாகாண சபைகளுக்கு தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. சில சந்தர்ப்பங்களில் குறுகிய காலதாமதங்கள் ஏற்பட்ட போதிலும், தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிந்தப் பின்னர் கடந்த 8 வருடங்களாக தேர்தல் இழுத்தடிக்கப்பட்ட வருகிறது. இந்த வருடத்தில் 4 ஜனாதிபதிகள் அதிகாரத்துக்கும் வந்துவிட்டனர்.

உண்மையில் மாகாண சபைத் தேர்தல் 8 வருடங்கள் இழுப்பட யார் காரணம்?

அதில் முக்கிய புள்ளியாக இருந்தது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான்.

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் கடுமையான அழுத்தங்களுக்கு அப்பாலேனும் மகிந்த ராஜபக்ச, தேர்தலை நடத்திக்காட்டினார். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற மைத்திரி – ரணில் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைகூட நடத்த முடியாத நிலைக்குச் சென்றதுடன், தேர்தலை நடத்த முடியாது பல முட்டுக்கட்டைகளை போட்டுவிட்டது.

மாகாண சபைத் தேர்தல் திருத்தம் என்ற பேரில் ரணில் திட்டமிட்டே இந்தத் தேர்தலை பிற்போட்டிருந்தார். எல்லை நிர்ணயம், பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி பேசினார் ரணில். அவர் நினைத்திருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேர்தலை நடத்தியிருக்க முடியும். ஆனால், அரசியல் சந்தர்ப்பவாதத்துக்காக அவர் தேர்தலை ஒத்திவைத்தார்.

ஆனால், இன்னமும் பெரும்பாலான தமிழ்த் தலைமைகள் ரணிலை நம்பி வருகின்றனர். மாகாண சபைத் தேர்தல் முறை எதிர்காலத்தில் இல்லாதுபோனால் அதற்கு முதன்மை காரணம் ரணில் விக்ரமசிங்கதான் என்பதை தமிழ் தலைமைகள் உணர வேண்டும்.

குறுகிய திருத்தங்களுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக இறுதியாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் கொண்டுவந்திருந்த திருத்தச்சட்டத்தையும் ரணில் கண்டுக்கொள்ளவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் மீது பலியை சுமத்திவிட்டு எவரும் தப்பித்துவிட முடியாது.

13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் முறைமை மாத்திரமே தற்போதைய சூழலில் இலங்கையில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கான ஒரே ஒரு தீர்வாக இருக்க வாய்ப்புள்ளது. அதற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு என்பது எதிர்கால பூகோள போக்குடன் நடைமுறைக்கு சாத்தியமற்றதாககூட மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

காசா விவகாரத்தில் எந்தவொரு நாடும் தலையீடு செய்ய மறுக்கின்றன. குறிப்பாக அரபு நாடுகள் கூட காசாவுக்காக நிற்கவில்லை. அமெரிக்கா சொல்வதே உலக அரசியல். எனவே, இலங்கையின் சமகால அரசியல் நகர்வுகள் என்பது எந்தவொரு நாட்டையும் பகைத்துக்கொள்ளாத அரசியல் நகர்வு. அதனை அணிசார கொள்கை என இலங்கை கூறுகிறது.

பூகோள அரசியல் நகர்வுகளை உணர்ந்து இருப்பதை தக்கவைத்துக்கொள்ள தமிழ் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். இதில் முஸ்லிம் தலைமைகளும் விதிவிலக்கல்ல.

சமகால அரசாங்கத்துடன், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை நடத்த மாகாண சபைத் தேர்தல் முறையை வென்றெடுக்க வேண்டும். இது வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து தலைமைகளுக்குமான பொறுப்பு.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றி பல தசாப்தங்களாக பேசுகிறோம். ஆனால், இருக்கும் பல அதிகாரங்களை இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் இழந்து வருவதை உணர மறுக்கின்றனர். இந்த விடயத்திலும் நீண்டகால, குறுகியகால தீர்வுகள் அவசியம்.

மாகாண சபை முறையை தமிழர்கள் அவர்களுக்கான தீர்வாக கருதினால் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார்.

எனவே, இந்த விடயத்தில் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையும், தீர்க்கமான முயற்சியும் அவசியம்.

அதேபோன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயத்தில் நிச்சயமாக கரிசனை கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை போன்று சிறிய தேர்தல் அல்ல. தமிழ் மக்கள் கோரும் அதிகார பகிர்வின் ஆரம்பகட்டமாக மாகாண சபை உள்ளது. இத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். இது ஒட்டுமொத்தமாக சிறுபான்மை மக்கள் எதிர்பார்க்கும் ஒரு விடயம் என்பதை அநுர உணர வேண்டும்.