ஆசிய கிண்ணத்தை வென்றது இந்தியா – கிண்ணத்தை வாங்க மறுத்தது!

0
99
Article Top Ad

ஏழாவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

எனினும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கிண்ணத்தை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளனர். இந்திய அணி கிண்ணத்தை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக் கிண்ண நிர்வாகம் கிண்ணத்தையும் பதக்கங்களையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து கிண்ணமின்றியே இந்திய அணியினர் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

எனினும், விரைவில் இந்தியாவிற்கு கிண்ணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் முக்கிய தலைவராக மோஷின் நக்வி  உள்ளதாலேயே அவரிடமிருந்து கிண்ணத்தை வாங்க மறுத்ததாகவும், ஆனால் கிண்ணமும் பதக்கமும் எடுத்துச்செல்லப்பட்டமை துரதிஷ்டவசமானது என்றும் தேவ்ஜித் கூறியுள்ளார்.

நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள ஐ.சி.சி மாநாட்டில், ஏ.சி.சி தலைவரின் செயலுக்கு எதிராக மிகவும் தீவிரமான மற்றும் மிகவும் வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தேவ்ஜித் சாய்க்கியா  குறிப்பிட்டுள்ளார்.

நேற்று டுபாயில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில்,   முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.  துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும், Fakhar Zaman 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி Tilak Varma ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், Shivam Dube 33 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தனர்.  பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Faheem Ashraf 03 விக்கெட்டிக்களை வீழ்த்தினார்.

இதனுடன் சேர்த்து இந்திய அணி ஆசிய கிண்ணத்தை 9 தடவைகள் கைப்பற்றியுள்ளது.