மறுசீரமைப்பிற்குப் பின்னரான இலங்கையின் கடன் தொகுப்பு மிகவும் சிக்கலானது என்றும், திறன்மிக்க அரச கடன் முகாமைத்துவமும் தொடர்ச்சியான ஒழுக்கமும் அவசியம் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
“இலங்கையின் அரச கடன் மறுசீரமைப்பு – சிக்கலான செயன்முறைகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்” என் ஆய்வுக் கட்டுரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உடனடி அழுத்தங்களை போக்க உதவியுள்ளன. இதனால் தனியார் கடன் வளர்ச்சி மீண்டும் தொடங்கவும் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆதரவழிக்கவும் முடிந்துள்ளது. எனினும், கடன் மறு சீரமைப்பு மட்டுமே கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாது என்பதை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ச்சியான விவேகமான நிதி மற்றும் பொருளாதார கொள்கைகளும் வலுவான நிறுவனங்களும் அத்தியாவசியம் என்பதோடு, நிதித்துறையில் எந்த சறுக்கல்களும் இருக்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக புதிய கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதற்கு முன்னர் செலவு மற்றும் அபாய பகுப்பாய்வு அவசியம் என்றும் புதிய கடன் திட்டங்கள் நாட்டின் இலக்குகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

