இலங்கையில் விரைவில் சுயாதீன சட்டத்தரணி அலுவலகம்

0
69
Article Top Ad

இலங்கையில் விரைவில் சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நீதித்துறை செயன்முறையை வலுப்படுத்தும் நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினருக்கும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கும் இடையில் இதுகுறித்து நேற்று (01) கலந்துரையாடலொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, சுயாதீன சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கான அடிப்படைக் கருத்துப் பத்திரத்தைத் தயாரித்த பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களைப் பெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாரிந்த ரணசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.