இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இரண்டாண்டு நீண்ட மோதலுக்கு பின், போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்தத்தால் இந்த ஒப்பந்தம் சாத்தியமானது என சர்வதேச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 பணயக்கைதிகளில் 7 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்திடம் அவர்களை ஒப்படைத்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆனந்தத்தில் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், இஸ்ரேலும் சுமார் 1,718 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரம்பின் பங்கு – அமைதியின் தூதர் என்ற பாராட்டு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தத்திற்கு பின், மத்திய கிழக்கில் அமைதிக்கான புதிய காலம் ஆரம்பித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். இஸ்ரேல் பாராளுமன்றமான க்னெசெட் (Knesset) அமர்வில் உரையாற்றிய அவர்,
“காசாவுக்கான நல்ல நேரம் தொடங்கிவிட்டது. இது ஒரு போரின் முடிவு மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் முடிவும் ஆகும். இது மத்திய கிழக்கின் வரலாற்றில் ஒரு புதிய விடியல்,” எனக் கூறினார்.
அவர் மேலும், கடந்த 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியதாக பெருமையுடன் தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் போரில் வாரம் 7,000 பேர் உயிரிழப்பதாகவும், ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயர்ந்த கௌரவமும், நோபல் பரிந்துரையும்
காசா அமைதி ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததற்கும், இஸ்ரேலுக்கு நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவிற்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்தார்.
அவருக்கு, இஸ்ரேலின் மிக உயர்ந்த சிவில் கௌரவமான இஸ்ரேலிய ஜனாதிபதி பதக்கம் (Israeli Presidential Medal of Honor) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வரும் மாதங்களில் ட்ரம்பிற்கு வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் பாராளுமன்ற சபாநாயகர் அமிர் ஒஹானா, மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்திய பங்களிப்புக்காக டொனால்ட் ட்ரம்பின் பெயரை அடுத்த வருட சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைத்துள்ளார்.
சமாதான மாநாட்டில் ஒன்றுகூடும் உலகத் தலைவர்கள்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு, ட்ரம்ப் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் (Sharm el-Sheikh) நகருக்கு புறப்பட்டுள்ளார். அங்கு நடைபெறவுள்ள “காசா சமாதான மாநாட்டில் (Gaza Peace Summit) அவர் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மேக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கெயர் ஸ்டார்மர், ஜெர்மன் சான்சலர் ஃப்ரீட்ரிஷ் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 67,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், லட்சக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உணவின்மையும், பொருளாதார சரிவும் காசா மக்களை கடுமையாகப் பாதித்துள்ளன.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் தொடங்கிய இந்த சமாதான முயற்சி மத்திய கிழக்கின் எதிர்காலத்தை மாற்றும் முக்கிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது. போர் நிறுத்தம் நிலைபெற்று, மனிதாபிமான நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு பணிகள் தொடர்ந்தால் மட்டுமே, காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் உண்மையான சமாதானம் கிடைக்கும் என்பது சர்வதேச பார்வையாளர்களின் நம்பிக்கையாகும்.
செய்தியாக்கம் – கே.கே.

