இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், கச்சத்தீவு மீட்பு குறித்து வலியுறுத்துமாறு இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
* கச்சத்தீவு மீட்பு
* இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல்
* மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை & திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல்
* பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு
* கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல்
ஆகியவற்றை இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் மோடியிடம் வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் மதுரையில் இடம்பெற்றிருந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கச்சத்தீவு குறித்து வெளியிட்டிருந்த கருத்து பேசுபொருளாகியிருந்ததுடன், இத்தருணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கச்சத்தீவுக்கு பயணமொன்றை திடீரென மேற்கொண்டிருந்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வழமை போன்று இம்முறையும் கச்சத்தீவு விவகாரம் பேசுபொருளாகவே இருக்கும் என இந்திய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

