டெல்லியில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 வைத்தியர்கள் உட்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பல இடங்களில் நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயற்பட்ட டொக்டர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், அவர் குண்டுவெடிப்பில் இறந்தாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி எனவும் அரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் நண்பர் எனக் கூறப்படுகிறது.

மேலும் கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சுமார் 3 மணி நேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார் மாலை 6.48 மணிக்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகுவெடித்துள்ளது.
இதனிடையே, முகமது உமரின் தாய், சகோதரியை காஷ்மீரில் வைத்து கைது செய்யப்பட்டள்ளனர்.
டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் உள்நாட்டு பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.
இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி
டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இரண்டு நாள் அரசு பயணமாக பூட்டானுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி.
திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
“இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அனைத்து நிறுவனங்களுடனும் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். எங்கள் விசாரணை அமைப்புகள் இந்த சதித்திட்டத்தின் காரணத்தை கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். இந்த கொடிய சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருவதாகவும், இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

