நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றறிக்கை நாளை (17) கல்விச் செயலாளர் ஊடாக வெளியிடப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை வலுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனடிப்படையில், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் இதே போன்ற தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாகச் செயலாளர் மூலம் நாளை வெளியிடப்படவுள்ளன.
அதேபோல், அரசு சாரா நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளை நிறுவுவதற்காக ஜனாதிபதிச் செயலாளர், சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளருக்கு தனிப்பட்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு திட்டத்துக்கு இணங்க, அரச நிறுவனங்களில் தேசிய நடவடிக்கைக் குழுக்களை அமைக்கும் திட்டத்துடன் இணைந்து இந்த முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், 1818 என்ற அழைப்பு இலக்கத்துடன் செயற்படும் போதைப்பொருள் தேசிய சபையின் அலுவலகம் வரும் 22ஆம் திகதி டொரிங்டனில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

