பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்களை கடுமையாக அடக்கும்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தார் என்ற குற்றச்சாட்டில், டாக்காவில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மதிப்பீட்டின்படி சுமார் 1,400 பேர் உயிரிழந்த பல மாதங்கள் தொடர்ந்த வன்முறை கலவரங்களுக்கு பிறகு வந்துள்ள இந்த தீர்ப்பு, நாட்டின் அரசியல் நிலையை மாற்றிய முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது.
பின்னணி
15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறைமையிலான மாற்றங்களை கோரி மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் வன்முறையாக மாறியபோது கடும் எதிர்ப்பை சந்தித்தார். 2024 ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து, ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் வெடித்தது. ஓகஸ்ட் மாதத்தில் பாதுகாப்பு படைகள் ஹெலிகொப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போராட்டத்தை அடக்க முயன்றதால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயிரிழந்தனர்.
பெகம் ரோக்கெயா பல்கலைக்கழகம் அருகே மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், அஷுலியாவில் சில மாணவர்கள் எரித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட கொடூரமும் நீதிமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன. விசாரணை முழுவதும் ஹசீனா நாட்டிற்கு திரும்பவில்லை. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில் அவர் இல்லாமலேயே விசாரணை நடத்தப்பட்டது.
உள்நாட்டு பதற்றம் மற்றும் எதிர்வினைகள்
தீர்ப்புக்குப் பிந்தைய சூழலில் டாக்கா முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகரம் பெரும்பாலும் முடக்கப்பட்டு, படையினர், பொலிஸ் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீர்ப்பை சிலர் நியாயமான நடவடிக்கையாக வரவேற்றாலும், பலர் இது அரசியல் பழிவாங்கலின் ஓர் அங்கம் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். மனித உரிமை அமைப்புகளும் விசாரணையின் வெளிப்படைத் தன்மை குறித்து கவலை தெரிவித்துள்ளன.
தன்மீதான குற்றச்சாட்டுகளை ஹசீனா நிராகரித்துள்ளதோடு, இது தன்னை அரசியல் ரீதியாக அழிக்க முயற்சிக்கும் நடவடிக்கை எனக் கூறியுள்ளார். தீர்ப்புக்கு முன் அவர், “உயிரை அளிப்பவன் அல்லாஹ். அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமும் அவருடையது” என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள்
இந்த மரண தண்டனை தீர்ப்பு பங்களாதேஷின் அரசியல் நெருக்கடியில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. மாணவர் போராட்டங்கள் பொதுமக்களின் விரக்தியிலிருந்து உருவாகி நாடு முழுவதும் பரவிய வன்முறையாக மாறி அரசின் வீழ்ச்சிக்குக் காரணமாகின.
இப்போது எழும் முக்கியமான கேள்விகள்:
- இந்தியாவில் உள்ள ஹசீனா நாடுகடத்தப்படுவாரா?
- வரவிருக்கும் தேர்தல்கள் எந்த சூழலில் நடைபெறும்?
- அரசியல் பிளவை சமாளிக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்கும்?
- பங்களாதேஷின் மனித உரிமை மற்றும் ஜனநாயக நிலைமைகள் எந்த திசையில் நகரும்?
சர்வதேச சமூகமும் இந்த சூழ்நிலையை கூர்ந்து கவனித்து வருகிறது. நீதிக் கட்டமைப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்து உலக நாடுகள் கரிசனை வெளியிட்டு வருகின்றன.
பங்களாதேஷின் சமூக கட்ட, ஆட்சிமுறை மற்றும் சர்வதேச உறவுகளுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் முக்கியமான சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
செய்தியாக்கம் – கே.கே.

