திருகோணமலையில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்றுவதற்கான பொலிஸார் நடவடிக்கை எடுத்தமை தொடர்பில், பொலிஸார் தரப்பில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது, அவர் இதனை குறிப்பிட்டார்.
புத்தர் சிலையொன்று சேதமடைந்தால் வன்முறை உருவாகக்கூடும் என்பதைக் அனைவரும் அறிந்திருப்பதாகவும், அதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும், பிரச்சினையை தீவிரப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது, சிலர் தேரர்களை தாக்கியதாகவும், அதற்கான விசாரணையை பொலிஸ்மா அதிபர் ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“பொலிஸார் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக மட்டுமே உள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் சட்டம் மீறப்படும் விதமாக அல்லது சமாதானம் பாதிக்கப்படும் விதமாக செயல்பட பொலிஸார் இடமளிக்க மாட்டார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த பகுதியில் தற்காலிக சிற்றுண்டிச்சாலை ஒன்றை கட்ட அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த கட்டுப்பாடுகளை மீறிய நிலையில் புத்தர் சிலை கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த வழக்கு விசாரணை நவம்பர் 26 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. பொலிஸார் சமர்ப்பித்த அனைத்து சாட்சியங்களும் பதிவு செய்யப்படுவதோடு, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து நீதவான் தீர்மானிப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2025.11.26 வரை அந்த பகுதியில் எந்தவித புதிய கட்டுமானங்களையும் செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த பகுதியில் அமைதியைப் பாதுகாக்க, பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது தேரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் விசாரணை நடத்தி வருகின்றார். இத்தகைய சம்பவங்களை தனது அரசியல் பயணத்திற்கு பயன்படுத்தி கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்காக மக்களை சேர்க்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் கூறினார்.
இதுபோன்ற நிகழ்வுகள், சிறிய வன்முறையிலிருந்து பாரிய இரத்தக்கொலை வரை உருவாகும் அபாயங்களை எதிர்கொள்வதாக நமது நாடு முன்பே அனுபவித்திருப்பதால், புத்தர் சிலையை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, புத்தர் சிலை மீண்டும் அகற்றப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26 அன்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசாங்கம் அதன்படி நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

