இலங்கையில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு அழைப்பு

0
99
Article Top Ad

இலங்கையில் புதிய சுற்றுலாத் திட்டங்களையும் திரைப்படத் தயாரிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இந்திய முதலீட்டாளர்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் வருகை தருமாறு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் நேற்று (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

வலுவான விமானத் தொடர்புகளும் ஆழமான கலாசாரப் பிணைப்புகளும் இருநாடுகளையும் இயற்கையான சுற்றுலாப் பங்காளிகளாக மாற்றியுள்ளன எனக் குறிப்பிட்ட விஜித ஹேரத்,  இவ்வருட இறுதிக்குள் 2.4 தொடக்கம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக கூறினார். 2030 ஆம் ஆண்டளவில், 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், 8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தையும் இலக்காகக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த இலக்கை அடைவதற்கு, இலங்கை நிலைபேறான தன்மை, சந்தை பல்வகைப்படுத்தல், வலுவான விமானத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. மேலும், “சுற்றுலாத் துறையின் எதிர்காலம் பற்றிய ரியாத் பிரகடனத்திற்கு” அமைய, தேசிய சுற்றுலாத் திட்டமிடலில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் கருவிகளை இணைத்தல் உள்ளிட்ட பூகோளப் போக்குகளை உள்வாங்கவும்  தயாராக உள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.

சமீபகாலமாக இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமைக்கு, இலவச விசா வசதி மற்றும் இலக்கு வைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டங்களே காரணமாக அமைந்தன. அதற்கமைய, இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கான ‘குறுகிய தூரப் பயணங்களில்’ மிகச் சிறந்த ஒரு இடமாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் நகரச் சுற்றுலா, கடற்கரைகள், மரபுரிமைச் சுற்றுலா, MICE சுற்றுலா (மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்), திருமணச் சுற்றுலா, திரைப்படச் சுற்றுலா மற்றும் கிரிக்கெட் சுற்றுலா போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

2,500 வருடகாலத் தொடர்பைக் கருத்தில் கொள்ளும்போது, பௌத்த யாத்திரைகள் மற்றும் இராமாயணப் பாதைகள் உள்ளிட்ட மதச் சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளதை அடையாளம் காண முடிகிறது. அதற்கமைய, விருந்தோம்பல் செயற்திட்டங்களை ஆரம்பிக்கவும், விழாக்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்புகளுக்காக இலங்கைக்கு மேலும் வருகை தருமாறும் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் முதலீட்டாளர்களையும்  ஊக்குவிக்கிறோம் என அமைச்சர் விஜித மேலும் குறிப்பிட்டார்.