இலங்கையின் மாறும் அரசியல் சூழலை வெளிப்படுத்திய நுகேகொடை பேரணி

0
57
Article Top Ad

நவம்பர் 21, 2025 அன்று நடைபெற்ற நுகேகொடை பேரணி, இலங்கையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் நடத்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க ஆர்ப்பாட்டமாகும். முக்கியமாக பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் பிற எதிர்க்கட்சி குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB), சர்வஜன பலய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி (NFF) போன்ற சில முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டன. இதற்கான காரணம் என்ன என்பதுதான் இதில் மிகப்பெரிய பேசுபொருளாக அமைந்தது.

எதிரணிகள் கூறுவது என்ன?

வரி நிவாரணம் மற்றும் பொதுப் பாதுகாப்பைப் பராமரித்தல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக பொதுஜன பெரமுனவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்தார். முன்பே அத்தகைய ஒப்பந்தங்களை நிராகரிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், அரசு IMF உடன் ஒத்துழைப்பைத் தொடர்வது தவறு எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சி “இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பத் தயாராக உள்ளது” என்று அவர் அறிவித்தது வலுவான அரசியல் எதிர்ப்பைக் காட்டுகிறது. மேலும், எதிர்க்கட்சியின் பிற உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர், ஊழல் நிறைந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கான முக்கியமான முதல் படியாக இந்தப் பேரணியை வர்ணித்தனர். அரசாங்கத்தைக் கூட்டாக சவால் செய்ய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பிவித்துரு ஹெல உறுமயவின் உதய கம்மன்பில, இந்த அரசாங்கம் முந்தைய எந்த நிர்வாகத்தையும் விட பேரணிகளுக்கு அதிகம் பயப்படுவதாகக் கூறினார்.

பங்கேற்பாளர்கள் யார்?

இந்த பேரணியில் பங்கேற்பாளர்களின் தன்மை குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. பலர், உண்மையான அரசியல் ஆதரவை விட, பணம், மது மற்றும் உணவு போன்ற ஊக்கத்தொகைகளால் அவர்கள் பங்கேற்கத் தூண்டப்பட்டதாகக் கூறினர். இது, நிறைவேற்றப்படாத அரசாங்க வாக்குறுதிகள் மற்றும் நீடித்துவரும் பொருளாதார சிரமங்கள் தொடர்பான விரக்தியை பிரதிபலிக்கிறது. யாருடைய கூட்டத்திற்கு வந்தோம் என்று தெரியாமல், சிலர் ஜனாதிபதியின் கூட்டம், அநுரவின் கூட்டம் என்றும் கூறினார். அதாவது, தாம் எதற்காக நுகேகொடைக்கு வந்தோம் என்று தெரியாத மக்களும் இதில் உள்ளடங்கியிருந்தனர். ஆகவே, இது உண்மையில் அரசு எதிர்ப்பு பேரணியா என்பதை நாம் சற்று நோக்கவேண்டும்.

விமர்சகர்களின் கருத்து

ஊடக அறிக்கைகளும் ஆய்வாளர்களும் குறிப்பிட்டதாவது, இந்தப் பேரணி விமர்சன குரலை உயர்த்தியிருந்தாலும், அது பெரும்பாலும் ஏற்கனவே அரசாங்கத்திற்கு எதிராக இருந்தவர்களையே அதிகமாக ஈர்த்தது. பல இலங்கையர்கள் அதிருப்தியடைந்திருந்த போதிலும், அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்விற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், மேலும் உயர்தரத் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளை தொந்தரவு செய்யாமல் இருக்க ஒலிபெருக்கி பயன்பாட்டில் விதிக்கப்பட்ட வரம்புகளையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அதிகரித்து வரும் பொதுமக்களின் அழுத்தத்தையும், சட்ட அமலாக்கத்தை அரசியல்மயப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொருளாதார மற்றும் நிர்வாக சவால்களுக்கிடையில் NPP அரசாங்கத்திற்கு எதிராக உருவாகி வரும் எதிர்ப்பு உந்துதலை நுகேகொட பேரணி தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதே சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சிகளுக்குள் நிலவும் ஆழமான பிளவுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சில கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றத் தயங்குவது, மாற்றத்திற்கான கூட்டு முயற்சிகளை பலவீனப்படுத்தும் சூழ்நிலையையும் உருவாக்கக்கூடும்.

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் விரக்தியடைந்திருந்தபோதிலும், அந்த அதிருப்தியை பரவலான அரசியல் செயல்பாடாக மாற்றுவதில் எதிர்க்கட்சியின் திறனில் வரம்புகள் உள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தப் பேரணியின் விளைவுகள், வரவிருக்கும் அரசியல் முன்னேற்றங்களையும், அதிகரித்து வரும் எதிர்ப்பை சமாளிக்க அல்லது கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் உத்திகளையும் பாதிக்கக்கூடும்.

அன்றைய விழா நாயகனாக நாமல் ராஜபக்ஷ முன்னிலைப் படுத்தப்பட்டிருந்ததை அனைவரும் நன்கறிவர். அவ்வாறான ஒரு சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவரோ ஏனைய முக்கிய தலைவர்களோ அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், அவர்களுக்கான இடம் என்ன? அதையறிந்து இதனை தவிர்த்திருக்கலாம் என்பது சில அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

“இந்த கூட்டத்தை வைச்சு, அங்க யாரும், அரசை உடனடியா கவிழ்க்க ஏலாது. அது கலர் கனவு!“ என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தமது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். கூட்ட ஏற்பாட்டாளர்கள் பலமுறை தமது கட்சிக்கு அழைப்பு விடுத்த போதும் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆக, இது நாமலின் அரசியல் எதிர்காலத்திற்கான ஒரு முன்னோட்ட வெளிப்படுத்தலாக அமைவதோடு, எதிர்ப்பாளர்கள் உள்ளனர் என்பதை அரசாங்கத்திற்கு காட்டுவதற்கான ஒரு முன்னேற்பாடாகவும் எடுத்துக்கொள்ள முடியும். நாமல் ராஜபக்ஷ இந்த மேடையில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது, எதிர்க்கட்சியின் கூட்டமைப்பில் யார் முன்னணி சக்தியாக அமையப் போகிறார்கள் என்ற இன்னொரு விவாதத்தையும் தூண்டியுள்ளது. ஒருசில கட்சிகள் இக்கூட்டத்திலிருந்து விலகியிருப்பது, எதிர்க்கட்சிகள் உண்மையில் ஒன்றிணைந்து ஒரு மாற்றத்தை உருவாக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் அதிகரிக்கிறது.

எது எப்படியோ, இந்த கூட்டம் தொடர்பான செய்தியறிக்கை மற்றும் சமூக ஊடக பதிவுகளில், பெரும்பாலான மக்கள் இது தேவையற்ற ஒன்று என்பதையே வெளிப்படுத்தியுள்ளனர். வழமையாக ஆளும் அரசுக்கு மக்கள் விமர்சனங்களையும் கடும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தும் ஒரு அனுபவத்தை கொண்ட சூழ்நிலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே அந்த கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன. அவை அரசுக்கு நம்பிக்கை தருபவை என்றபோதும், தமது இலக்குகள், மக்களின் எதிர்பார்ப்புகள், நாட்டின் எதிர்காலம் என்பவற்றை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு அலாரமாக அரசாங்கம் இந்த பேரணியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே சந்தர்ப்பத்தில். எதிர்க்கட்சிகள் தமது உட்பிளவுகளை சரிசெய்து கூட்டு முயற்சிக்கான திட்டமிடலை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

செய்தியாக்கம் – கே.கே.