இலங்கைக்கு நேசக்கரம் நீட்டும் இந்தியா – அமெரிக்கா

0
197
Article Top Ad

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியாவும் அமெரிக்காவும் நேசக்கரம் நீட்டியுள்ளன.

அந்த வகையில், இந்திய அரசும் மக்களும் வழங்கிய நன்கொடைகளை ஏற்றிய இந்திய விமானம் ஒன்று இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்கள் அடங்குகின்றன. இதனை இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது.

மேலும், இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிய மற்றொரு விமானமும் இன்று (29) முற்பகலில் இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, டிட்வா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில்,பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் துரித மீட்சிக்காக பிரார்த்திப்பதாகவும், நெருக்கமான கடல் அயல்நாடாக இந்தியா “சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் HADR உதவிகளை உடனடியாக அனுப்பிவைத்துள்ளதாகவும்,தேவையான மேலதிக உதவிகளையும் வழங்கத் தயார் எனவும், இந்தியா எப்போதும் இலங்கையுடன் துணைநிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, டிட்வா புயலினால் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை முன்னிட்டு, அவசர நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில்,நாடு தீவிரமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சவாலான தருணத்தில் அமெரிக்கா இலங்கையுடன் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.