வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணச் செயல்பாடுகளை திறம்பட ஒருங்கிணைக்க வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகள் இணைந்து அவசர ஒருங்கிணைப்புப் பிரிவை நிறுவியுள்ளன.
இந்தப் பிரிவு, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், இலங்கையில் செயல்படும் வெளிநாட்டு இராஜதந்திர மிஷன்கள், மற்றும் பல்வேறு சர்வதேச ஆதரவாளர்கள் வழங்கும் உதவிகளை ஒருங்கிணைத்து துல்லியமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்றடைய செயற்படும்.
அனைத்து உதவிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், முழு செயல்முறையிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனர்த்தப் பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஒழுங்கான அமைப்பையும் இந்தப் பிரிவு வழங்கும். சர்வதேச உதவிகள் மற்றும் ஆதரவாளர்களின் பங்களிப்புகள் வேகமாகவும் வினைத்திறனுடனும் தேவையுடையவர்களுக்கு சென்றடைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அதேவேளை, இந்த அவசர ஒருங்கிணைப்புப் பிரிவு, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு, அனர்த்தத்துக்கு விரிவான மற்றும் பயனுள்ள தேசிய பதிலளிப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

