முன்னெச்சரிக்கை புறக்கணிப்பே இழப்பிற்கு காரணம் – எதிரணியினர் குற்றச்சாட்டு

0
228
Article Top Ad

பாதகமான வானிலையால் ஏற்பட்ட தற்போதைய பேரழிவைத் தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கபீர் ஹாஷிம் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

அரசாங்கம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு பெரிய அளவிலான பேரழிவைத் தவிர்த்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

நீர்த்தேக்கங்களில் நீரை திடீரென ஒரே நேரத்தில் வெளியேற்றியதே பெரும் வெள்ளத்திற்குக் காரணமாக இருந்ததாக அவர் கூறினார். வழக்கமான நடைமுறைகளின்படி, கடைசி நிமிடத்தில் கதவுகளை திறப்பதற்காக காத்திருக்காமல், வானிலை முன்னறிவிப்புகளை கருத்தில் கொண்டு படிப்படியாக நீரை வெளியேற்றியிருக்க வேண்டும் என எம்.பி. வலியுறுத்தினார்.

இந்த முறையைப் பின்பற்றியிருந்தால், ஏற்பட்ட உயிரிழப்புகளில் 70 சதவீதத்தையாவது தடுக்க முடிந்திருக்கும் என்றார்.

அரசாங்கத்தின் அலட்சியமான அணுகுமுறையே மக்கள் உயிரிழப்பிற்கும், பெரும் சொத்துச்சேதத்திற்கும் காரணமாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அனர்த்த நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பு என இன்று பாராளுமன்றில் எதிரணியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடிக்கவே, இறுதியில் எதிரணியினர் வெளிநடப்புச் செய்தனர். அதனையடுத்து பாராளுமன்றம் டிசம்பர் 3ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.