சீரற்ற காலநிலை பாதிப்பு: விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு துரித நடவடிக்கை திட்டம்

0
45
Article Top Ad

சீரற்ற காலநிலை காரணமாக விவசாயம், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்ட சேதங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான துரித நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் விவசாய மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் போது நாட்டை பாதித்த மண்சரிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நெல், சோளம், தானியங்கள் மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக கிடைத்த தரவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வழிமுறைகள் ஆராயப்பட்டன.

கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் கலந்துரையாடலின் முக்கிய அம்சமாகக் குறிப்பிடப்பட்டது. நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு, அவற்றை விரைவில் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த கலந்துரையாடலில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, கமத்தொழில், கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமராச்சி, நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கித்சிறி வெலிகெபொல மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.கே. சரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.