இழப்பீட்டை அநீதியான முறையில் யாரும் பெறக்கூடாது – ஜனாதிபதி

0
55
Article Top Ad

டிட்வா புயல் அனர்த்தத்தால் முழுமையாக சேதத்தை எதிர்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை, விவசாயக் காணிகளின் அளவு மற்றும் தேவையான நிதி என்பன குறித்த அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார். இந்த இழப்பீட்டை நியாயமாகக் கிடைக்க வேண்டியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதனை அநீதியான முறையில் யாரும் பெறக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டை நிச்சயமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மீண்டும் பயிற்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காக இன்று (07) காலை அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் சேதமடைந்த அநுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.