பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மேற்குக் கரையை (West Bank) அடைய முயன்ற கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளதாக கனேடிய சிவில் சமூகக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் நாடாளுமன்றத்தின் ஆறு உறுப்பினர்கள் அண்டை நாடான ஜோர்டானிலிருந்து மேற்குக் கரையை அடைய முயன்றபோது, இஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாக கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கனடிய முஸ்லிம் வோட் என்ற இலாப நோக்கற்ற அமைப்பு ஏற்பாடு செய்த பயணத்தின் ஒரு பகுதியாக, கனேடிய சமூகத் தலைவர்களுடன் பயணம் செய்த எம்.பி.க்கள், “பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டு நுழைவுத் தடையை எதிர்கொண்டதாக National Council of Canadian Muslims (NCCM) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து NCCM தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பிரவுன் வெளியிட்ட அறிக்கையில், “இந்த முன்னேற்றம் மிகவும் கவலைக்கிடமானதும், ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுமானதாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தூதுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இஸ்ரேலிய அதிகாரிகள் மின்னணு பயண அங்கீகாரங்களை வழங்கியிருந்த போதிலும், சட்டப்பூர்வமாக பயணம் செய்த கனேடிய தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் இறுதியில் ‘பொது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்’ எனக் குறிப்பிடப்பட்டு நுழைவிலிருந்து தடுக்கப்பட்டனர்” என்றார்.
“இந்த முடிவால் நாங்கள் வருந்துகிறோம். அதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள நிலவரங்களை சுயாதீனமாக அறிய முயல்வோரின் அணுகலைக் கட்டுப்படுத்தும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் பரந்த நடைமுறையுடன் இது வருந்தத்தக்க வகையில் ஒத்துப்போகிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் கனடிய முஸ்லிம் வோட், “கனேடிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் இப்பகுதிக்கு அணுக முடியாத நிலை, பொது நலனுக்குரிய முக்கிய விடயமாகும். இது கனடியர்களுக்கு பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது” என தெரிவித்துள்ளது.

