மத்திய மாகாணத்தில் கனமழை தீவிரம் – மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம்

0
51
Article Top Ad

கடந்த 48 மணித்தியாலங்களில் கண்டி, உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவிக்கையில், இந்த கனமழை காரணமாக தெனபிட்டிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக ரிகில்லகஸ்கடை பகுதியில் வாலப்பனை வீதி மண்சரிவினால் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் நேற்று (18) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மேலும் சில சிறிய அளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இன்றும் (19) மழை பெய்யக்கூடும் என்பதால், மக்கள் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்துள்ளதால் மத்திய மாகாணத்தில் கனமழை தொடர்கின்றதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார். மண்சரிவு அபாயம் காணப்படும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும், அவசர அனர்த்த நிலைகளில் நிவாரணம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நீர்ப்பாசன பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவிக்கையில், மகாவலி கங்கையின் மணம்பிட்டிய பகுதியில் நீர்மட்டம் தற்போது சிறு வெள்ள மட்டத்தை விட அதிகரித்துள்ளதாக கூறினார். இதன் காரணமாக திருகோணமலை வரையிலான தாழ்நிலப் பகுதிகள் மேலும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதோடு, சோமாவதிய பிரவேச வீதி ஏற்கனவே நீரில் மூழ்கியுள்ளது.

மல்வத்து ஓயாவின் தந்திர்மலை பகுதியில் நீர்மட்டம் சிறு வெள்ள மட்டத்தை எட்டியுள்ள போதிலும், அது மேலும் அதிகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 34 நீர்த்தேக்கங்களும், 48 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன.

எனினும், எந்தவொரு நீர்த்தேக்கத்திலிருந்தும் அபாயகரமான முறையில் நீர் திறந்துவிடப்படவில்லை என்றும், திடீர் நீர்மட்ட மாற்றங்கள் அல்லது அதிகரிப்புகள் குறித்து அவதானமாக இருந்து உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.