இன்று நத்தார் பண்டிகை – ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து

0
57
Article Top Ad

இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை சிறப்பிக்கும் முகமாக, இன்று உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் புனித நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக இலங்கையில் இயற்கை பேரனர்த்த்தில் பாதிக்கப்பட்டு மக்கள் இன்னும் முகாமைகளில் தங்கியுள்ள நிலையில், பண்டிகையை மிகவும் எளிய முறையில் கொண்டாடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இயேசு கிறிஸ்து பிறந்த புனித பெத்தலகேம் நகரில், காசா போர் நடவடிக்கை காரணமாக 2023 முதல் நத்தார் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இம்முறை அங்கு நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

இலங்கையின் பிரதான நத்தார் நள்ளிரவுத் திருப்பலியானது, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் உஸ்வெட்டகெய்யாவ புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

இலங்கையர்களாகிய நாம், அண்மையில் நாடு எதிர்கொண்ட மிகவும் வேதனையான இயற்கை பேரழிவிலிருந்து உறுதியுடன் மீண்டு வரும் ஒரு இக்கட்டான சூழலிலேயே இந்த நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே இந்தப் பண்டிகையின் உண்மையான அர்த்தங்களாகும்.  இக்கட்டான காலங்களில் அயலவர்களைக் கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னத மனிதப் பண்பை இலங்கை மக்கள் அண்மைய அனர்த்தங்களின் போது மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களைத் தமது சகோதர மக்களுக்காகச் சுமந்து சென்ற மக்கள், நத்தாரின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்று நான் நம்புகிறேன் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இருள் நீங்க வேண்டுமானால் ஒளியின் பிரகாசம் பரவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, மனித சமூகத்தை மீட்கத் தன்னை அர்ப்பணித்து, மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை நம்பிக்கைக்கு உதாரணமாகக்  குறிப்பிட்டுள்ளார்.  யதார்த்தமான வேதனையான உண்மைகளை எதிர்கொண்டு, சவால்களை வென்று, ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமரின் வாழ்த்துச் செய்தி

ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கிய இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் துயரம், வலி மற்றும் அமைதியான வேதனைக்கு மத்தியிலேயே இம்முறை நத்தார் மலர்ந்துள்ளது. ஆயினும், நத்தாரின் உண்மையான அர்த்தத்திற்கு இணங்கவும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளால் வழிநடத்தப்பட்டும், நம் நாட்டு மக்கள் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் துறந்து, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் ஒன்றிணைந்துள்ளனர். தமது செயல்களின் மூலம், அவர்கள் அன்பு, இரக்கம் மற்றும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்ற கிறிஸ்துவின் உன்னத போதனையை உலகிற்கு பறைசாற்றியுள்ளனர்.

இந்த தருணத்தில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், நமது தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் அனைத்து சமூகங்களும் ஒரு பொதுவான நோக்கத்துடனும் கூட்டுப் பொறுப்புடனும் இணைய வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் நிற்கிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தமது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பலரின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, நாம் திட்டமிட்டுள்ள அந்த “புதிய நாட்டை” கட்டியெழுப்பும் பொதுவான இலக்கை நோக்கி நாம் அயராது உழைப்போம். அவர்களின் நம்பிக்கைகளும் அபிலாஷைகளும் நிறைவேற்றப்படுவதை நாம் உறுதி செய்வோம். இந்த நத்தார் தினத்தில், ஒற்றுமை, அன்பு, இரக்கம் மற்றும் பொறுப்புணர்வுடன் வழிநடத்தப்பட்டு, சிறந்ததொரு எதிர்காலத்தை நோக்கிய எமது பகிரப்பட்ட கனவைத் தொடர, பிரஜைகளாக நாம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எமது உறுதிப்பாட்டை மீண்டும் புதுப்பிப்போம் என தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி

பேரழிவின் போது இனம், மதம், மொழி வேறுபாடுகளின்றி இலங்கையர்கள் காட்டிய ஒற்றுமையே தேசத்தின் உண்மையான வலிமை என்றும் அந்த மனிதாபிமானத்தின் ஊடாக நாம் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் நாட்டுக்குத் தேவைப்படுவது பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் அல்ல என்றும், மக்களின் வேதனைக்கு மருந்தாகும், நீதியான மற்றும் கருணை நிறைந்த ஒரு நாட்டை உருவாக்குவதே காலத்தின் தேவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தங்களின் போது மக்களைத் தனிமைப்படுத்தாத, உதவியற்றவர்களைப் பாதுகாக்கும் ஓர் அரசை உருவாக்குவது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். இழந்தவற்றை விடவும், நம்மிடம் எஞ்சியுள்ள மனிதாபிமானமும், நாளைய நாள் பற்றிய விசுவாசமுமே நம்மை வலிமைப்படுத்தும் என அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.