நாடு இயற்கை அனர்த்தத்தில் சிக்கியுள்ள இந்த சூழ்நிலையில், துன்புறும் மக்களை மறந்து சுயநலமாக கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடாதீர்கள் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இவ்வருட கிறிஸ்மஸை அனைத்து விதமான ஆடம்பரங்களையும் தவிர்த்து, எளிமையுடனும் தாழ்மையுடனும் கொண்டாடுமாறு அவர் தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் இலங்கை மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிகவும் எளிய மற்றும் ஏழ்மை நிறைந்த சூழலில் நிகழ்ந்ததை நினைவூட்டியதுடன், அதிலிருந்து பெற வேண்டிய ஆன்மீகப் பாடங்களை சிந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சமீபத்தில் இலங்கையை பாதித்த கடும் புயல் காரணமாக சுமார் 20 இலட்சம் பேர் வீடிழந்துள்ளதையும், நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய கர்தினால் ரஞ்சித், இத்தகைய சூழலில் கிறிஸ்தவர்களாகிய நாம் துன்புறும் மக்களை மறந்து சுயநலமாக கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்றார்.
ஏழைகளுடனும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுடனும் கிறிஸ்மஸை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், ஆடம்பரத்தைத் தவிர்த்து, எளிமையுடன் கொண்டாடுவதன் மூலம் உண்மையான கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இயேசு பிறந்த குகையைப் போல, மதிப்புகளால் நிரம்பிய உள்ளங்களை உருவாக்கி, கொடுப்பதும் பகிர்வதும் நிறைந்த கிறிஸ்மஸாக இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், அனைவருக்கும் புனிதமான மற்றும் மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

