அமெரிக்காவை அதிகமாக சார்ந்திராத ஒரு வலுவான பொருளாதார சக்தியாக மாற வேண்டும் – கனடா பிரதமர்

0
183
Article Top Ad

அமெரிக்காவை அதிகமாக சார்ந்திராத ஒரு வலுவான பொருளாதார சக்தியாக கனடா மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் கனடாவின் தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்கால பாதை குறித்து, சி.பி.சி செய்திச் சேவைக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஒன்பது மாதங்களில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளதாகவும், இருப்பினும் இன்னும் நிறைவேற்ற வேண்டிய பல பணிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவது மற்றும் உள்நாட்டு தொழில்துறைகளை ஊக்குவிப்பதே தனது அரசின் முக்கிய இலக்காக இருப்பதாக பிரதமர் கூறினார். பொருளாதாரம் கடந்த ஆண்டை விட தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளதாகவும், அதே நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் இன்னும் நீடித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சவால்களை சமாளிக்க ஆற்றல் மிக்க வளர்ச்சி திட்டங்களை தொடர்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்காவை அதிகமாக சார்ந்திராத ஒரு வலுவான பொருளாதார சக்தியாக மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கார்னி தெரிவித்தார். அதற்காக வர்த்தக உறவுகளை பல்வகைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கனடா–அமெரிக்கா–மெக்ஸிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நாட்டின் நலன்கள் உறுதியாக பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச அளவில் கனடாவின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்நடவடிக்கைகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அதேபோல், கனடாவை உலக அரங்கில் மேலும் நம்பகமான மற்றும் நிலையான நாடாக உருவாக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கனடா சரியான பாதையில் முன்னேறி வருவதாக கூறிய பிரதமர் மார்க் கார்னி, வர்த்தக சவால்கள், உள்நாட்டு செலவு பிரச்சனைகள் மற்றும் உலகளாவிய மாற்றங்களை எதிர்கொண்டு, நாட்டை நீண்டகால வளர்ச்சி நோக்கி கொண்டு செல்ல தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என வலியுறுத்தினார்.