2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைப் பாதித்த பாரிய சுனாமி பேரழிவிற்கு இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த பேரழிவில் இலங்கையில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். கடலோரப் பகுதிகளில் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் பெருமளவில் அழிவடைந்தன. பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டது.
சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான அமைச்சரவைத் தீர்மானம் 2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
இம்முறை தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நினைவேந்தல் நிகழ்வு, காலி மாவட்டத்தில் உள்ள பெரலிய சுனாமி நினைவுத் தூபி முன்னிலையில் இன்று காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் சுனாமி பேரழிவினால் மட்டுமன்றி, வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்படவுள்ளனர்.
அதேவேளை, நாடு முழுவதும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மாவட்ட ரீதியாக பல்வேறு சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுனாமி பேரழிவு, அனர்த்தங்களுக்கு முன்னெச்சரிக்கை, ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் சமூக விழிப்புணர்வின் அவசியத்தை உலகிற்கு உணர்த்திய முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. இதன் நினைவாக, எதிர்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தேசிய பாதுகாப்பு தினம் மீண்டும் வலியுறுத்துகிறது.

