சமஸ்டி அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது – இளையதம்பி சிறிநாத்

0
46
Article Top Ad

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கையான சமஸ்டி முறையிலான தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் உறுதியாக தெரிவித்தார். மட்டக்களப்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.

பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட அனுபவங்களின் மூலம் தெளிவாகப் புரிந்துள்ளதாக இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

அந்த அடிப்படையில், குறைந்தபட்ச அரசியல் தீர்வாக இந்தியா முன்வைத்த 13வது அரசமைப்பு திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்களை முழுமையாகப் பெற்றுக் கொண்டு, அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, தமிழ் மக்களின் மைய அரசியல் கோரிக்கை சமஸ்டி அடிப்படையிலான தீர்வே என்றும், அந்தக் கோரிக்கையை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதிய ஆண்டை எதிர்கொள்வதற்குள் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள், அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார முன்னேற்றங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என பரிசீலித்தால், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயல் காரணமாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், போர்க்காலத்தில் சிதைக்கப்பட்ட கட்டுமானங்கள் இன்னும் முழுமையாக மீளெழ முடியாத நிலையில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், புயல் பாதிப்புகள் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அவர் கூறினார்.

அரசியல் தீர்வு தொடர்பில், குறைந்தபட்சமாக 13வது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய மாகாண சபை அதிகாரங்களே கூட இன்றளவும் பாரியளவில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தின் அனுமதியுடன் எளிதாக முன்னெடுக்கக்கூடிய அதிகாரங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது என்றும், முதற்கட்டமாக 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபையின் முழுமையான அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதே யதார்த்த அரசியல் பாதை என இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.