இலங்கையில் நடைமுறையில் உள்ள மூன்று முக்கிய வீடமைப்புத் திட்டங்களுக்கான நிதி உதவியை இரட்டிப்பாக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான இராஜதந்திர கடிதங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
உயர்மட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக அபிவிருத்தித் திட்டங்களின் கீழ், கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு I மற்றும் கிராம சக்தி தெற்கு II ஆகிய திட்டங்களுக்கு உரிய ஒப்பந்தங்கள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கைசாத்திடப்பட்டிருந்தன.
இந்தத் திட்டங்களின் அடிப்படையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தாமாகவே வீடுகளை நிர்மாணிக்கும் முறைமையின் கீழ், தலா ஐந்து இலட்சம் இலங்கை ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.
எனினும், கொரோனா தொற்று பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் வீடுகளை முழுமையாக கட்டிமுடிப்பதில் பயனாளிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை பத்து இலட்சம் ரூபாயாக உயர்த்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான கடிதங்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுது லால் போகாவத்த ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
அதிகரிக்கப்பட்ட இந்த நிதியுதவியின் மூலம் 1,550 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

