சுவிட்சர்லாந்து சுற்றுலாத் தளத்தில் வெடிப்பு – 40 பேர் உயிரிழப்பு

0
58
Article Top Ad

சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிரான்ஸ்-மொன்டானா பனிச்சறுக்கு சுற்றுலாத் தளத்தில் அமைந்துள்ள மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சம்பவ இடத்திற்கு 10 ஹெலிகாப்டர்கள், 40 அவசர ஊர்திகள் மற்றும் 150 மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவசர மீட்பு நடவடிக்கைகள் அடுத்த சில நாட்கள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வலேஸ் (Valais) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு தற்போது முழுமையாக நிரம்பியுள்ளதால், தீக்காயங்களுக்கு விசேட சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஏனைய மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும், அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத காணொளிகளில், கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த இடம் தீப்பற்றிய நிலையில் காணப்படுகின்றது. பாதுகாப்பு காரணங்களால் கிரான்ஸ்-மொன்டானா பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், வான்வழிப் போக்குவரத்துக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவ நேரத்தில் அந்த மதுபான விடுதியில் சுமார் 300 பேர் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்ண் நகரிலிருந்து சுமார் இரண்டு மணி நேரப் பயண தூரத்தில், ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மத்தியில் கிரான்ஸ்-மொன்டானா அமைந்துள்ளது.